Bankrupt Sri Lankan government .. Food shortage !! -1071202429


திவாலான இலங்கை அரசு.. உணவு தட்டுப்பாடு!! மோசமான நிலையில் மக்கள்! என்னவாகும் ? 


பொருளாதார சரிவு காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் களம் இறங்கிய நிலையில், அரசியல் நெருக்கடியும் அங்கு ஏற்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய பொருளாதார சரிவில் இருந்து எப்படி மீண்டு வருவது என தெரியாமல் விழி பிதுங்கி இருக்கும் இலங்கை அரசுக்கு உலக வங்கியின் 160 மில்லியன் டாலர் கடன் பெரும் உதவியாக உள்ளது. இருப்பினும் இலங்கை முதல் முறையாக திவாலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் இலங்கை அரசு திவாலாகி விட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி தற்போது அறிவித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணவீக்கம் 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கும் என அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுனர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் மொத்த கடன் அளவை மறு சீரமைக்கும் வரை இலங்கை அரசால் கடனுக்கான எந்த தொகையையும் செலுத்த முடியாது கொள்கை வகுப்பாளர்கள் இலங்கைக்கு கடன் கொடுத்தவர்களிடம் தெரிவித்துள்ளனர். 

இலங்கை நாணயம் மற்றும் பொருளாதார நெருக்கடி இந்த மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் உணவு மற்றும் எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு தேவையான அந்நியச் செலாவணி இருப்பு கூட இல்லாமல் இலங்கை பரிதவித்து வருகிறது. ஜனவரி முதல் வெளிநாட்டில் இருந்து இலங்கை வாங்கிய அத்தியாவசிய பொருட்களின் நிலுவைத் தொகை அதிகரித்துள்ளது. மேலும் இலங்கை அரசு சுமார் 12.6 பில்லியன் டாலர் தொகைக்கான பேமெண்ட்-ஐ நிறுத்தி வைத்துள்ளது. 1948 இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இலங்கை முதல் முறையாக வாங்கிய கடனுக்குத் திருப்பி செலுத்த முடியாமல் திவாலாகியுள்ளது. 

எனவே ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.இந்த நிலையில், இலங்கைக்கு உதவி  செய்ய தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அந்நாட்டு அதிபர் கோத்தபயவுக்கு தகவல் தெரிவித்து உள்ளது.   இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து நாட்டை மீட்டெடுக்கத் தேவையான நிதியுதவிகளை வழங்க  தயார் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அதற்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளதால், அதை எற்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இது அந்நாட்டு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog