மண்டபத்தில் கோர விபத்து “தலை நசுங்கி.. கொடூரமாக” பலியான மாணவன்!


மண்டபத்தில் கோர விபத்து “தலை நசுங்கி.. கொடூரமாக” பலியான மாணவன்!


ஜெயக்குமாரின் மகள் மண்டபம்

திருவள்ளூர் மாவட்டம் பெத்திக்குப்பம் பகுதியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்ரியா மற்றும் மருமகன் நவீனுக்கு சொந்தமாக மீன் வலை உற்பத்தி தொழிற்சாலை ஒன்று பல வருடங்களாக இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலைக்கு அருகில் ஜெயக்குமாரின் மகளுக்குச் சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இந்த திருமண மண்டபத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்து ஆண்டு திறந்து வைத்தார்.

மண்டபத்தில் விபத்து

இந்த மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வந்துள்ளது. இந்த நிகழ்வில் உணவு பரிமாறும் வேலைக்காக வந்த காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவன் சீத்தல், திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜெயராமன் 23, விக்னேஷ் 21 ஆகியோர் லிஃப்டில் இரண்டாவது மாடிக்கு பெரிய பாத்திரத்தில் உணவை கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பாரம் தாங்காமல் லிஃப்ட்டின் இரும்பு ரோப் அறுந்து விழுந்தது.

மாணவன் பலி

இந்த விபத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவன் சீத்தல் தலை நசுங்கி உயிரிழந்துள்ளார். லிஃப்ட்டில் இருந்த மற்ற இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

லிஃப்ட் விபத்தில் மாணவன் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. லிஃப்ட் கம்பி அறுந்து விழுந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.

350 கிலோ எடையை தூக்கும் திறன் கொண்ட அந்த லிஃப்டில் அதிக எடைகொண்ட உணவு பாத்திரத்தோடு மூன்று பேர் பயணித்ததால், பாரம் தாங்காமல் இரும்பு ரோப் அறுந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விபத்து ஏற்பட்ட திருமண மண்டபத்தில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீச்சார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் லிஃப்ட் உபகரணங்கள் அனைத்தும் சீன தயாரிப்புகள் எனத் தெரியவந்துள்ளது.

உரிமையாளர்கள் மீது வழக்கு

லிஃப்ட் விபத்தில், உணவு பரிமாறும் வேலைக்கு வந்த மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திருமண மண்டபத்தின் உரிமையாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்ரியா, மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிஃப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயக்குமார் மகள் கைதாக வாய்ப்பு

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகளும், விபத்து ஏற்பட்ட மண்டப உரிமையாளருமான ஜெயப்ரியா உட்பட மூவர் மீது ஜாமீனில் வரமுடியாத பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து கும்மிடிப்பூண்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog