பள்ளி, கல்லூரிகளில் 10,371 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு954918262
பள்ளி, கல்லூரிகளில் 10,371 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு
சென்னை: நடப்பு ஆண்டில் பள்ளிக் கல்வித்துறை, கல்லூரிகளில் நிரப்ப வேண்டிய ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் அவற்றுக்கான போட்டித் தேர்வுகள் நடக்கும் தேதி, ஆகியவை குறித்த திருத்திய திட்டப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி 10,371 பணியிடங்களுக்கு இந்த ஆண்டு போட்டித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில், பள்ளிக் கல்வித்துறையில் தற்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான பணியில் ஆசிரியர் தேர்வுவாரியம் ஈடுபட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் டெட் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து லட்சக் கணக்கான ஆசிரியர்கள் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். அவற்றில் திருத்தங்கள் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆகஸ்ட் 25ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் தகுதித் தேர்வில் முதல் தாள் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையைப் போல அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பாலி டெக்னிக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வுகளையும் ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வுகள் நடத்தி, அதில் தெரிவு செய்யப்படும் நபர்கள் பணியிடங்களில் நியமனம் செய்வதும் நடைமுறையில் இருக்கிறது. இதற்கிடையே, நீதிமன்ற வழக்குகளும் முடிவுக்கு வந்ததால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்களையும் நிரப்ப இரு கல்வித்துறைகளும் முடிவு செய்துள்ளன. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான போட்டித் தேர்வுக்கான திட்ட அறிவிப்பில் சில திருத்தங்களை செய்து அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு 10371 ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அட்டவணையில் கூறப்பட்டுள்ளதாவது;
* முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 2,404 உள்ளன. இதற்கு போட்டித் தேர்வு நடத்தப்படும்.
* ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் தேர்வு நடக்க உள்ளது.
* மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய விரிவுரையாளர்கள்பணியிடங்கள் 155 உள்ளன. இதற்கான போட்டித் தேர்வு அக்டோபர் மாதம் நடக்க உள்ளது.
* பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 1,874 உள்ளன. போட்டித் தேர்வு டிசம்பர் 2022ம் தேதி நடக்க உள்ளது.
* இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 3,987 உள்ளன. போட்டித் தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்படும்.
* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பிஎட் கல்லூரிகள் ஆகியவற்றில் உள்ள 1,358 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புக்கு உரிய அரசாணை வெளியானதும் அறிவிப்பு வெளியிடப்படும். தேர்வு குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
*அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 493 விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அரசாணை வெளியிடப்பட்டதற்கு பிறகு வெளியிடப்படும். தேர்வு குறித்த விவரங்களும் பின்னர் அறிவிக்கப்படும்.
* அரசு பொறியியல் கல்லூரிகளில் உள்ள 97 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அரசாணைக்கு பிறகு வெளியாகும். தேர்வுக்கான தேதியும் பின்னர் அறிவிக்கப்படும்.
Comments
Post a Comment